நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி? என புரளி

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக, குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாக வெளியான தகவல் புரளி என கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2019-07-22 06:29 GMT
பெங்களூரு

கர்நாடகாவில் 2 வாரங்களாக உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று  சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என அறிவித்தார்.

அதைதொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது 2 நாட்கள் விவாதம் நடந்தது. கவர்னர் 2 தடவை கெடு விதித்தும், வாக்கெடுப்பு நடக்கவில்லை. சபை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் இன்று காலை கூடும் என கூறப்பட்டது. தற்போதுவரை சபை கூட வில்லை.
சபை கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று பேசுவார்கள். இறுதியில் முதல்-மந்திரி குமாரசாமி பேசுவார். அவர் பேசி முடித்த பிறகு இன்று மாலை 6  மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக, குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குமாரசாமி உடல்நலமில்லாமல் இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வெளியான தகவல் புரளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசைக் கவிழ்க்க முயற்சிப்பவர்களே இத்தகைய புரளியை பரப்பி விடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்