“பிறந்த குழந்தைக்கு அப்பா என உரிமை கொண்டாடிய 3 பேர்” மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி

கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தான் தான் அப்பா என்று உரிமை கோரி 3 பேர் வந்ததால் மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.

Update: 2019-07-23 14:05 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேதாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீபன்கார் பால் என்பவர் தனது மனைவி என்று கூறி கர்ப்பிணியான சப்னா மைத்ராவை கடந்த சனிக்கிழமை அன்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  கடந்த ஞாயிற்றுகிழமை சப்னாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

சப்னா தனக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டு புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்திருக்கிறார்.  இதனைப் பார்த்த ஹர்ஸா கேத்ரி என்பவர் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்து வந்துள்ளார். ஸ்வப்னா தனது மனைவி என்றும், அவருக்கு பிறந்த குழந்தை தன்னுடைய குழந்தை என்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் நேதாஜி நகர் போலீசில் புகார் அளித்தது.

அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் ஹர்ஸா, சப்னாவுடன் தனக்கு நடந்த திருமணத்திற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை மருத்துவமனையில் காண்பித்து உள்ளார். இதையடுத்து சப்னாவின் உண்மையான கணவர் ஹர்ஸா தான் என முடி செய்த போலீசார் அவரை மட்டும் சப்னா மற்றும் குழந்தையுடன் இருக்க அனுமதி தந்துள்ளனர். அதே நேரம் தீபன்கர் பாலை உண்மையான கணவர் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் விரட்டி அடித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் அங்கேயே இருந்துள்ளார். 

இதனிடையே திடீர் திருப்பமாக பிரதீப் ராய் என்ற இளைஞர், தான் தான் சப்னாவின் உண்மையான கணவர் என்று மருத்துவமனைக்கு சென்று அந்த குழந்தையை உரிமை கோரியுள்ளார். இதனை கேட்டு தலை சுற்றிப்போன மருத்துமனை ஊழியர்கள் 3 கணவர்மார்களையும்  விரட்டிவிட்டதோடு மீண்டும் போலீசாரை நாடினர். குழந்தைக்கும், சப்னாவுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

இதில் என்ன ஒரு திருப்பம் என்றால் சப்னா யார் தன்னுடைய குழந்தைக்கு உண்மையான அப்பா என்பதை இதுவரை சொல்ல மறுத்துவருவது தான் என்று கூறப்படுகிறது.  அவர்  வாய் திறந்து கூறினால் தான்  3 பேர்களில் உண்மையான அப்பா யார் என்று தெரிய வரும் இது தொடர்பாக  சப்னாவிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் மருத்துவமனையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்