மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டே முகநூலில் நேரலை செய்த மாணவர் பலி

மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டே முகநூலில் நேரலை செய்த மாணவர் பலியானார்.

Update: 2019-07-23 21:00 GMT
அகர்தலா,

திரிபுரா மாநிலம், சப்ரூம் மாவட்டத்தை சேர்ந்த ஹரினா கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் தாஸ் (வயது 25). இவர் கொல்கத்தாவில், நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இவர், 2 நாள் விடுமுறையில் தன் பெற்றோரை பார்க்க சொந்த ஊருக்கு வந்து இருந்தார். நேற்று முன்தினம் மாலை சப்ரூமில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில் நிலையத்தை காண அவரது நண்பர் சுமன் தாசுடன் (24) மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ராகுலுக்கு ஒரு வினோதமான பழக்கம் உண்டு. அவர் எப்போது மோட்டார் சைக்கிளில் சென்றாலும், அதை நேரலை வீடியோவாக முகநூலில் தானே ஒளிபரப்புவார். இதற்காக, அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்போர் பலர் உண்டு. அதன்படி, தற்போதும் மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டு நேரலை வீடியோ எடுத்து முகநூலில் ஒளிப்பரப்பினார்.

அப்போது எதிர்பாராத விதமாக, பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. உடனே ராகுலும் அவரது நண்பரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், ராகுல் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது நண்பர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதில் சோகம் என்னவென்றால், அவரது மரணம் நடந்து 12 மணி நேரம் ஆன பின்பும், ராகுல் நேரலையாக ஒளிபரப்பிய வீடியோவை 10 ஆயிரத்துக்கும் மேலானோர் பார்த்து உள்ளனர். மேலும் அவர் விபத்தில் இறந்த தகவலை அறிந்த ஏராளமானோர் அனுப்பிய இரங்கல் செய்தியால் அவரது முகநூல் பக்கம் நிரம்பி வழிந்தது.

மேலும் செய்திகள்