எதிர்க்கட்சி தலைவரை தரக்குறைவாக பேசியதால் உ.பி. சட்டசபையில் அமளி

எதிர்க்கட்சி தலைவரை தரக்குறைவாக பேசியதால், உத்திரபிரதேச சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

Update: 2019-07-23 21:15 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது மாநில ஊரக மேம்பாட்டு துறை மந்திரி டாக்டர் மகேந்திரசிங் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் முந்தைய சமாஜ்வாடி அரசை போல் தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் ராம்கோவிந்த் சவுத்ரி, மந்திரியுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் கோபம் அடைந்த மந்திரி மகேந்திரசிங், எதிர்க்கட்சி தலைவர் பற்றி தகாத வார்த்தை ஒன்றை கூறினார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டு, இரு தரப்பினரும் சபாநாயகர் இருக்கையை சுற்றி நின்று கூச்சலிட்டனர். பின்னர் சபாநாயகர் ஹிருத்ய நாராயண் தீட்சித் 1 மணி நேரம் சபையை ஒத்திவைத்தார்.

சபை மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சி மீதும், அதன் தலைவர் மீதும் தனக்கு முழு மரியாதை உண்டு என்று கூறிய மந்திரி மகேந்திரசிங், தான் கூறிய வார்த்தையை திரும்ப பெற்றார். அதைத்தொடர்ந்து சபையில் அமைதி ஏற்பட்டது.

மேலும் செய்திகள்