அரசு மானியங்களுக்கு ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

அரசு மானியங்களுக்கு ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

Update: 2019-07-24 21:24 GMT
புதுடெல்லி,

இந்திய மக்களுக்கு 12 இலக்கங்களைக்கொண்ட ஆதார் அட்டை, அடையாள அட்டையாக வழங்கப்படுகிறது.

இந்த அடையாள அட்டை இதுவரை 128 கோடி பேருக்கு வழங்கப்பட்டு விட்டது.

இந்த ஆதார் மற்றும் இதர சட்டங்கள் அதிகாரப்பூர்வ திருத்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன்படி ஆதார் அடையாள அட்டையை இனி அரசு மானியங்களுக்கும் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மாநில அரசுகளின் கோரிக்கைக்கு இணங்க ஆதார் தகவல்களை, மாநில அரசு திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இயங்கி வருகிற பொதுத்துறை நிறுவனமான ‘பேக்ட்’ உர நிறுவனத்துக்கு புத்துயிரூட்டும் வகையில், அதன் 481.79 ஏக்கர் நிலத்தை கேரள அரசுக்கு ஏக்கர் 1-க்கு ரூ.1 கோடி என்ற அளவில் மொத்தம் ரூ.481.79 கோடிக்கு விற்பனை செய்வதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.

சுரங்க தொழிலாளர்களுக்கான தேசிய சுகாதார கல்வி நிறுவனத்தை (என்ஐஎம்எச்), ஐ.சி.எம்.ஆர். என்.ஐ.ஓ.எச். என்னும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய தொழில்சார் சுகாதார கல்வி நிறுவனத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

வரும் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி வரையிலான ஓராண்டு காலத்துக்கு 40 லட்சம் டன் சர்க்கரையை இருப்பு வைப்பதற்கும், இதற்காக ரூ.1,674 கோடி செலவிடவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

2019-20 பருவத்துக்கான கரும்புக்கு குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.275 என்பதில் மாற்றம் செய்ய தேவையில்லை என்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு முடிவு செய்தது.

மேலும் செய்திகள்