தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-25 10:53 GMT
புதுடெல்லி,

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 19-ம் தேதி  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்யுமாறு அவையின் துணைத்தலைவர் ஹரிவான்ஷ், பணியாளர் நலன் இணை மந்திரி ஜிதேந்திர சிங்கை கேட்டுக்கொண்டார். அப்போது, உரக்க குரல் எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.  அமளி நீடித்ததால், மதிய உணவு வேளைக்கு முன்பாக இருமுறை மாநிலங்களவை  ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், அமளிக்கு இடையே விவாதம் நடைபெற்றது. 

விவாதத்துக்கு பிறகு தேர்வுக்குழுவுக்கு மசோதாவை அனுப்புவது பற்றி முடிவு செய்யலாம் என்று மந்திரி மற்றும் ஆளும் தரப்பு எம்.பிக்கள் கூறியதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்