பயங்கரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் -இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2019-07-25 11:07 GMT
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்ந்து வருவதாகவும், அந்நாடு பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக கூறி அந்நாட்டுக்கு வழங்கி வந்த ராணுவ நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் தங்கள் நாட்டில் பயங்கரவாத இயக்கங்கள் இல்லை என கூறிவந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் 40–க்கும் மேற்பட்ட பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக பிரதமர் இம்ரான்கான் ஒப்புகொண்டுள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றியபோது இதனை கூறினார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் நாங்களும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக பயங்கரவாதிகள் குறித்த களத்தின் உண்மை நிலவரத்தை நாங்கள் அமெரிக்காவிடம் கூறவில்லை என்பது தான் உண்மை. பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க வேண்டும் என அமெரிக்கா பாகிஸ்தானிடம் வலியுறுத்தியபோது, பாகிஸ்தான் தம்மை தற்காத்துக் கொள்ளும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.

அப்போது இருந்த பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் என்னை போன்ற பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. தற்போது பாகிஸ்தானில் இருந்து மட்டும் 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானிலோ அல்லது காஷ்மீரிலோ பயிற்சி பெற்ற சுமார் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா எங்களுக்கு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டும் என்று இம்ரான்கான் பேசினார். இதற்கு பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் பேசுகையில், “பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் செயல்படுகிறார்கள், அவர்கள் பயிற்சி பெற்று காஷ்மீர் செல்கிறார்கள் என அந்நாட்டு பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளார். அவர்களுடைய பூமியில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும்,”எனக் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்