ஆட்சியை கவிழ்த்த எடியூரப்பாவுக்கு ஜனதாதளம் (எஸ்) ஆதரவு? - எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை; குமாரசாமி பரிசீலனை

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களது ஆட்சியை கவிழ்த்த எடியூரப்பாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கட்சி தலைமைக்கு ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை குமாரசாமி பரிசீலிக்கிறார்.

Update: 2019-07-27 23:15 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு கடந்த 23-ந் தேதி கவிழ்ந்தது. இதில் எடியூரப்பாவுக்கு முக்கிய பங்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகத்தில் நேற்று முன்தினம் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபையில் நாளை (திங்கட்கிழமை) முதல்-மந்திரி எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

இதற்கிடையில், கூட்டணி ஆட்சி கவிழ்ப்பு, நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து நேற்று முன்தினம் இரவு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள எச்.விஸ்வநாத், கோபாலய்யா, நாராயணகவுடா ஆகியோருக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று குமாரசாமியிடம் எம்.எல்.ஏ.க்கள் கேட்டுக்கொண்டனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மாநிலத்தில் அடுத்து நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும் என்று எம்.எல். ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் புதிதாக அமைந்துள்ள எடியூரப்பா அரசுக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆதரவு அளிக்கலாம், மீதமுள்ள 4 ஆண்டுகளிலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அரசை வழிநடத்த பா.ஜனதாவுக்கு உதவி செய்யலாம் என்றும், அரசு தவறு செய்தால் குற்றச்சாட்டு கூறலாம், வளர்ச்சி திட்டங்களை வரவேற்கலாம் என்றும், எதிர்க்கட்சியாக இருந்து கட்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று கூறி உள்ளனர். இது அதிரடி திருப்பம் ஆகும்.

அத்துடன் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவை கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா மற்றும் குமாரசாமி எடுக்கலாம் என்றும் எம்.எல்.ஏ.க்கள் கூறி உள்ளனர். இதுகுறித்து முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது குறித்தும், மாநிலத்தில் புதிய அரசு அமைந்திருப்பதால் ஜனதாதளம் (எஸ்) கட்சி அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறியது உண்மை தான். ஏனெனில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதால், நம் கட்சி எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கு தேவையான நிதியை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் தொகுதியில் வளர்ச்சி பணிகளை செய்ய முடியும். மக்களிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்று எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர். பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவுக்கான அதிகாரத்தை தேவேகவுடா மற்றும் குமாரசாமிக்கு வழங்குவதாக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இதுபற்றி குமாரசாமியும், தேவேகவுடாவும் முடிவு எடுப்பார்கள். இவ்வாறு ஜி.டி.தேவேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்