காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. ராஜினாமா - பா.ஜனதாவில் இணைகிறார்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், பா.ஜனதாவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

Update: 2019-07-30 18:15 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர் சஞ்சய் சிங். அமேதி அரச குடும்பத்தை சேர்ந்த இவர், அசாம் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்தநிலையில் பா.ஜனதாவில் இணைய முடிவு செய்த அவர், தனது எம்.பி. பதவியையும், கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘காங்கிரஸ் இன்னும் பழைய காலங்களிலேயே இருந்து வருகிறது. எதிர்காலத்தை பற்றி அறியாதது. இன்று ஒட்டுமொத்த நாடும் பிரதமர் நரேந்திர மோடியோடு இருக்கிறது. நாளை பா.ஜனதாவில் இணைய இருக்கிறேன். இதனால் காங்கிரசில் இருந்து விலகியதோடு, மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ளேன்’’ என்றார்.

இவர் ஏற்கனவே பா.ஜனதா மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் சிங், பா.ஜனதா வேட்பாளர் மேனகா காந்தியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்