கார் விபத்துக்கு முன்பே கற்பழிக்கப்பட்ட இளம்பெண் தலைமை நீதிபதிக்கு கடிதம்

உன்னா கற்பழிப்பில் பாதிக்கப்பட்ட இளம்பெண், கார் விபத்துக்கு முன்பே கொலை மிரட்டல்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது தெரியவந்துள்ளது.

Update: 2019-07-30 22:00 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். கடந்த 28-ந் தேதி கற்பழிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் சென்ற கார் மீது ஒரு லாரி மோதியது.

இதில் 2 பெண்கள் பலியானார்கள். அந்த இளம்பெண்ணும், கார் டிரைவரும் காயம் அடைந்தனர். இது அந்த இளம்பெண்ணை கொலை செய்வதற்கான முயற்சி என எதிர்க்கட்சியினர் கூறிவருகிறார்கள்.

அந்த பெண் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் இருப்பதாகவும், எங்களது உயிருக்கு ஆபத்து என்றும் விபத்துக்கு முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு ஊழியர் ஒருவர் கூறும்போது, “தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 12-ந் தேதி கடிதம் எழுதி அனுப்பினர். அவர் இந்தியில் எழுதப்பட்டு இருந்த அந்த கடிதத்தை பார்த்துவிட்டு, செயலாளர் ஜெனரலிடம் இந்த கடிதத்தை படித்துப்பார்த்து குறிப்பு தயாரித்து எனது கவனத்திற்கு அனுப்புங்கள் என்று கூறினார்” என தெரிவித்தார்.

அந்த பெண்ணும், அவரது குடும்பத்தினர் 2 பேரும் எழுதிய அந்த கடிதம் அலகாபாத் ஐகோர்ட்டு, சில மாநில அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 7-ந் தேதி கற்பழிப்பு குற்றவாளிகளான செங்கார் எம்.எல்.ஏ. மற்றும் அவரது கூட்டாளிகளின் உறவினர்கள் சிலர் எங்கள் வீட்டுக்கு வந்து மிரட்டினார்கள். அடுத்த நாளும் மற்றொருவர் வந்து மிரட்டினார். கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கொலை மிரட்டல் விடுத்தனர். எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர். அதோடு தங்கள் வீட்டுக்கு வந்து மிரட்டியவர்கள் பெயர் விவரம், அவர்கள் வந்த காரையும் வீடியோ எடுத்து கடிதத்துடன் இணைத்து அனுப்பியிருந்தனர்.

கார் விபத்துக்கு மறுநாள் போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்தனர். அதில் மிரட்டல் விடுத்த சிலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையே மத்திய அரசு இந்த கார் விபத்து வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்