காபி டே அதிபர் சித்தார்த் மீது சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது - வருமான வரித்துறை விளக்கம்

காபி டே அதிபர் சித்தார்த் மீது சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Update: 2019-07-30 21:41 GMT
புதுடெல்லி,

கர்நாடக தொழில் அதிபர் சித்தார்த் தனது கடிதத்தில் வருமான வரித்துறையினர் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருப்பது பற்றி வருமான வரித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பெயரை வெளியிட விரும்பாத அவர் கூறியதாவது:-

வருமான வரி சட்டப்படி தான் துறையினர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்தனர். அவரது இடங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் சொத்துகள் முடக்கப்பட்டது. சித்தார்த் தனது தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளை விற்றதன் மூலம் ரூ.3,200 கோடி திரட்டியதாக கூறியுள்ளார். அதற்காக குறைந்தபட்ச மாற்று வரியாக ரூ.300 கோடி செலுத்துவதற்கு பதில், அவர் ரூ.46 கோடி மட்டுமே செலுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பரவிவரும் சித்தார்த்தின் கடிதம் என்று கூறப்படுவதில் உள்ள அவரது கையெழுத்தும், எங்கள் துறையில் உள்ள ஆவணங்களில் இருக்கும் அவரது கையெழுத்தும் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்