தேசிய கீதம் இசைத்தபொழுது சோர்வால் தரையில் அமர்ந்த மத்திய மந்திரி

மகாராஷ்டிராவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபொழுது சோர்வு ஏற்பட்டு, மத்திய மந்திரி நிதின் கட்காரி தரையில் அமர்ந்து விட்டார்.

Update: 2019-08-01 10:42 GMT
சோலாப்பூர்,

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் நகரில் உள்ள புண்யசுலோக அஹில்யாதேவி ஹோல்கார் சோலாப்பூர் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவுரவ விருந்தினராக மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  இதில் அனைவரும் எழுந்து நின்றனர்.  கட்காரியும் எழுந்து நின்றுள்ளார்.  இந்நிலையில், சோர்வால் திடீரென இடதுபுறம் சாய்ந்த கட்காரி, அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த பாதுகாவலர்களின் உதவியுடன் தரையில் அமர்ந்து விட்டார்.

இதன்பின்பு மருத்துவ அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்தனர்.  இதுபற்றி கட்காரியின் உதவியாளர் கூறும்பொழுது, நேற்று தொண்டை பாதிப்பிற்காக கட்காரி அதிகளவில் மருந்துகளை உட்கொண்டுள்ளார்.  இதனாலேயே இன்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

அவருக்கு பரிசோதனை செய்தபின், ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகியவை சீராக உள்ளன என மருத்துவர் உறுதி செய்துள்ளார் என கூறினார்.  அவரது உடல்நிலை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  அதனால் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு புனே நகரில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கட்காரி கலந்து கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுபோன்று கட்காரிக்கு நடப்பது முதன்முறையல்ல.  கடந்த வருடம் டிசம்பரில் நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைத்தபொழுது எழுந்து நிற்க முயன்று மயங்கிய கட்காரி பின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இந்த வருடம் ஏப்ரலில், தேர்தல் பேரணியில் உரையாற்றிய அவர் பின்னர் தனது இருக்கையில் அமருவதற்காக திரும்பி வந்தபொழுது, திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்து விட்டார்.

மேலும் செய்திகள்