‘பா.ஜனதா அரசால், அழிப்பதற்கு மட்டுமே முடியும்’ - ராகுல் காந்தி கடும் தாக்கு

நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

Update: 2019-08-03 23:30 GMT
புதுடெல்லி,

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு 2-வது முறையாக அமைந்திருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம், இரும்பு, சிமெண்டு, சுத்திகரிப்பு பொருட்கள், மின்சாரம் போன்ற தொழில்துறைகளின் வளர்ச்சி இந்த ஆண்டு 0.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து இருப்பதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த பொருளாதார மந்தநிலை தொடர்பாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘பா.ஜனதா அரசால் எதையும் உருவாக்க முடியாது. கடந்த பல ஆண்டுகளாக ஆர்வத்துடனும், கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்டு இருப்பதை அழிக்க மட்டுமே முடியும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் அவர் இந்திய பொருளாதார மந்த நிலை தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தனது டுவிட்டர் தளத்தில் இணைத்திருந்தார்.

குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் குறித்து எல்-அன்ட்-டி நிறுவன தலைவரின் செய்தி, ரெயில்வேயில் இருந்து 3 லட்சம் பணியாளர்களை விலக்கும் திட்டம், ஜூலை மாதத்தில் வாகன விற்பனை மந்தம், பி.எஸ்.என்.எல்-எம்.டி.என்.எல். நிறுவனங்களை சேர்ந்த 1.98 லட்சம் ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் வழங்காதது உள்ளிட்ட செய்திகளை அவர் பகிர்ந்திருந்தார்.

முன்னதாக, நாட்டின் பொருளாதாரம் தடம் புரண்டு வருவதாக கடந்த 1-ந் தேதியும் அவர் மத்திய அரசை விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்