முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜ் உடல் தகனம் - ஜனாதிபதி, பிரதமர் இறுதி அஞ்சலி

முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-08-07 11:10 GMT
புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியுமான சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 67.

சுஷ்மா சுவராஜ் மறைந்த செய்தி கேட்டதும், டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு தலைவர்களும், தொண்டர்களும் படையெடுத்தனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மத்திய மந்திரிகள் அனுராக் தாக்குர், பாபுல் சுப்ரியோ, பா.ஜனதா எம்.பி. மனோஜ் திவாரி ஆகியோர் அஞ்சலி செலுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

நேற்று சுஷ்மா சுவராஜ் இல்லத்துக்கு சென்று அவரது உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி விட்டு, சுஷ்மா சுவராஜின் மகள் பன்சுரி சுவராஜ் தலையில் கைவைத்து ஆறுதல் கூறினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சுஷ்மா சுவராஜ், இந்திய அரசியலில் ஒளி வீசியவர். அவர் ஏற்படுத்திய வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்றார்.

மூத்த தலைவரும், சுஷ்மா சுவராஜின் குருவாக கருதப்பட்டவருமான அத்வானி, கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத், சமாஜ்வாடி நிறுவனர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் பிருந்தா கரத்,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், யோகா குரு பாபா ராம்தேவ், நடிகை ஹேமமாலினி எம்.பி., நோபல் பரிசு பெற்றவரான கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், சுஷ்மா சுவராஜ் உடல், பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் மீது அமித்ஷா தேசிய கொடியை போர்த்தினார். அப்போது, பா.ஜனதா நிர்வாகிகள் ஜே.பி.நட்டா, ஹர்ஷவர்தன், ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், மனோஜ் சின்கா, சாக்‌ஷி மகராஜ், நடிகை ஜெயபிரதா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை சுஷ்மா சுவராஜ் உடல், டெல்லி லோதி சாலையில் உள்ள மின்சார சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சாலையின் இருபுறமும் பா.ஜனதா தொண்டர்கள் கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.

லோதி சாலை சுடுகாட்டில் நடந்த இறுதிச்சடங்குகளில், பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பூடான் மன்னர் ஷெரிங் டோப்கே, அத்வானி, பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சுஷ்மா சுவராஜ் உடல் முழு அரசு மரியாதையுடன் மின்சார சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டெல்லி மாநில அரசு 2 நாள் துக்கம் அறிவித்துள்ளது. அரியானா மாநில அரசும் 2 நாள் துக்கம் அனுசரிக்கிறது. குஜராத் மாநில அரசும், மாநில பா.ஜனதாவும் நேற்றைய நிகழ்ச்சிகளை ரத்து செய்தன.

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவருடைய கணவர் கவுஷலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

அதில், “நீண்ட காலமாக மக்களவையில் இணைந்து பணியாற்றியதால் சுஷ்மாவுடன் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அவர் சிறந்த பேச்சாளர், நல்ல நாடாளுமன்றவாதி, அவரது மறைவால் நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன்” என்று சோனியா கூறியுள்ளார்.

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு ஐ.நா. பொதுச்சபை தலைவர் மரிய பெர்னாண்டா எஸ்பினோசா கார்க் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அசாதாரண பெண்மணி, தனது வாழ்வையே பொதுச்சேவைக்கு அர்ப்பணித்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி சையது அக்பருதின், இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய், கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்

மற்றும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத், ராப்ரிதேவி, முரளி மனோகர் ஜோஷி, மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்