பாலியல் புகாரில் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி சபையில் இருந்து வெளியேறறம்

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளக்கலுக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரி லூஸி களப்புரா சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

Update: 2019-08-08 06:48 GMT
சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளக்கல். அவர் கேரளாவில் உள்ள கான்வென்டில் கடந்த 2014 முதல் 2016 வரை துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

துஷ்பிரயோக புகாரில் சிக்கிய பிஷப் பிராங்கோவை கைது செய்யக் கோரி கன்னியாஸ்திரிகள் கொச்சியில் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் பிஷப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளில் ஒருவரான சிஸ்டர் அனுபமாவை இடமாற்றம் செய்து சபை உத்தரவிட்டது.

தொடர்ந்து தற்போது பிஷப் பிராங்கோவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி லூஸி களப்புரா என்பவரை சபையில் இருந்து நீக்கியுள்ளார்கள். கடந்த மே மாதம் 11 ஆம் தேதி டெல்லியில் நடந்த பொது கவுன்சிலில் கன்னியாஸ்திரி லூஸி களப்புராவை சபையைவிட்டு வெளியேற்ற ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், சபை வழங்கிய நோட்டீசுக்கு சரியான விளக்கம் அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் பேசிய லூசி, சபையில் இருந்து நீக்கப்பட்டதற்கான கடிதம் கிடைத்தது. உடனடியாக சபையில் இருந்து வெளியேற மாட்டேன். இந்த நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்