கேரள வெள்ள பாதிப்பு: பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு

பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளில் உதவுமாறு வலியுறுத்தினார்.

Update: 2019-08-09 07:36 GMT
புதுடெல்லி, 

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை கொட்டுவதால், ஆங்காங்கே நிலச்சரிவு சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள வயநாடு தொகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசினார். கேரளாவில், குறிப்பாக தனது சொந்த தொகுதியான வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

இத்தகவலை ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. என்ற பெயரிலான ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

பிரதமருடன் பேசினேன். கேரளாவில், குறிப்பாக வயநாட்டில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமுள்ள அனைத்து உதவிகளும் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். வெள்ள பாதிப்பை தணிக்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்குவதாக பிரதமர் உறுதி அளித்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்