80 இடங்களில் நிலச்சரிவு: கேரளாவில் கனமழைக்கு 57 பேர் பலி - மீட்பு பணி தீவிரம்

கேரளாவில் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் 80 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை கனமழைக்கு 57 பேர் பலியாகி உள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-08-10 22:44 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவின் வடக்கு மாவட்டங்களான வயநாடு, மலப்புரம், கண்ணூர் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. மழை நீடிப்பால் மாவட்டத்தின் மலை கிராம சாலைகள் துண்டிக்கப்பட்டன. வயநாடு மேப்பாடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

வீடுகள், ஆலயங்கள், மசூதிகள் மண்ணுக்குள் புதைந்தன. இதுபோன்று 8 மாவட்டங்களிலும் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு, எங்கு பார்த்தாலும் மண்ணுக்குள் புதைந்தது போலவும், வெள்ளக்காடாகவும் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை உள்ளது.

ராணுவத்தினரும், மீட்பு படையினரும் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இதுவரை காணாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காகவும் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பலத்த மழை காரணமாக கேரளாவில் 8 மாவட்டங்களில் 80 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் வயநாடு மேப்பாடி மற்றும் மலப்புரம் கவளப்பாறை ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவு நிகழ்ந்தது. இதுவரை கனமழைக்கு 57 பேர் பலியாகி உள்ளனர். இதில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாரும் ஈடுபட்டு வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் துரிதமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீனவர்கள் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர். மலப்புரம் முண்டேரியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு இருந்தவர்கள் அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வயநாட்டில் 30 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் 15 லட்சம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்