சிக்கிம் மாநிலத்தில் எஸ்டிஎப் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்

சிக்கிம் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக எஸ்.டி.எப். கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.

Update: 2019-08-13 15:25 GMT

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்.) கட்சி, மற்றொரு மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) என்ற கட்சியிடம் தோல்வி அடைந்தது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் எஸ்.டி.எப். கட்சி 15 தொகுதிகளிலும், எஸ்.கே.எம். கட்சி 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

எஸ்.டி.எப். கட்சியின் தலைவர் பவன்குமார் சாம்லிங் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 25 வருடங்கள் மாநில முதல்வராக இருந்தவர். அவரது கட்சியில் 2 பேர் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் அவர்கள் தலா ஒரு தொகுதியை ராஜினாமா செய்தனர். எனவே அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 13 ஆனது. மாநில அரசியலில் திடீர் திருப்பமாக அந்த 13 பேரில் 10 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் பா.ஜனதா பொதுச் செயலாளரும், வடகிழக்கு பிராந்திய பொறுப்பாளருமான ராம் மாதவ் முன்னிலையில் பா.ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர். 

இதனால் அந்த மாநிலத்தில் பா.ஜனதா முக்கிய எதிர்க்கட்சியாக மாறுகிறது. பின்னர் 10 பேரும் பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்தனர். விரைவில் அங்கு 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அந்த தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.டி.எப். கட்சி முன்பு பா.ஜனதா கூட்டணியில் இருந்தது. பின்னர் அந்த இடத்தை எஸ்.கே.எம். கட்சி பிடித்துக்கொண்டது. 

பா.ஜனதா தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் எஸ்.கே.எம். இடம்பெற்றுள்ளது. பா.ஜனதாவில் இணைந்த 10 எம்.எல்.ஏ.க்களும் கூறுகையில், பா.ஜனதா வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துவதால் அக்கட்சியில் இணைந்ததாக தெரிவித்தனர். சிக்கிம் மாநிலத்தில் அடுத்து பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்