இந்தியர்களின் வாழ்வில் கரையான்கள் போன்று ஊழல் ஊடுருவி விட்டது; பிரதமர் மோடி

இந்தியர்களின் வாழ்வில் கரையான்கள் போன்று ஊழல் ஊடுருவி விட்டது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2019-08-15 12:30 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  2வது முறையாக பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் முதன்முறையாக உரையாற்றினார்.  அவர் பேசும்பொழுது, என் அன்பிற்குரிய நாட்டு மக்களே, கற்பனையை கடந்து ஊழல் மற்றும் வேண்டியவருக்கு ஆதரவுடன் செயல்படுவது ஆகியவை நம்முடைய நாட்டை புண்படுத்தி உள்ளது என உங்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஊழல் நம்முடைய வாழ்வில் கரையான்கள் போல் ஊடுருவி விட்டது.  அதனை தூக்கியெறிய நாம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என கூறினார்.

இந்தியா ஊழலை வேருடன் ஒழிப்பதில் சில வெற்றிகளை பெற்றுள்ளது.  ஆனால் அந்த வியாதி மிக ஆழமுடன் மற்றும் பரந்து விரிந்து விட்டது.  அதனால் ஊழலை முடிவுக்கு கொண்டு வர அரசு அளவில் மட்டுமின்றி ஒவ்வொரு குடிமகனும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

இந்த பணிகள் அனைத்தும் ஒரே முயற்சியில் முற்று பெற்று விடாது.  கெட்ட பழக்கங்கள் மற்றும் பழைய வியாதிகள் சில நேரங்களில் சரியாகி விடும்.  ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது, அவை மீண்டும் திரும்பி விடும் என்றும் பேசினார்.

ஊழல் என்பது ஒரு நோய்.  அதனை வீழ்த்த வேண்டும்.  தொடர்ச்சியாக தொழில் நுட்பம் பயன்படுத்தி சில முடிவுகளை நாம் எடுத்துள்ளோம்.

நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக அவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் ஒவ்வொரு நிலையிலும் அரசு முயன்று வருகிறது.

கடந்த 5 வருடங்களிலும், புதிய ஆட்சியிலும், அரசில் இருந்த பலர் வெளியே போகும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர் என்பதனை நீங்கள் காணலாம்.  ஊழலில் ஈடுபடுவோரிடம், உங்கள் சொந்த தொழிலை நீங்கள் மேற்கொள்ளுங்கள்.  உங்களது சேவை இனி நாட்டுக்கு தேவை இல்லை என்று கூறி விடுகிறோம் என பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்