சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்கிறார்... ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. தீவிரம்

சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்கிறார்... ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது.

Update: 2019-08-22 09:54 GMT
புதுடெல்லி,

ஐஎன்எஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ப.சிதம்பரத்தை கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். சிபிஐ அலுவலகத்திற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. வயது மூப்பு, மருத்துவ தேவை காரணமாக ப.சிதம்பரத்திற்கு இரவில் ஓய்வு அளிக்கப்பட்டது. 

ப.சிதம்பரத்தை கைது செய்து வைத்துள்ள சிபிஐ தலைமையகம் ஜூன் 30, 2011 அன்று திறந்து வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் உள்துறை அமைச்சராக இருந்த  ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் புதிய வளாகத்தை திறந்து வைத்தார்.

ப.சிதம்பரத்தை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளது. இதுவரை முறையாக ஆஜராகி உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் தரப்பில் கேட்கப்பட வாய்ப்புள்ளது. 

ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனு தற்போது தேவையற்றதாகிவிட்டது.

இதனிடையே, ப.சிதம்பரத்தை அதிகாலையில் எழுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு பெற்று உள்ளது. காலை 9.45க்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்றது. 

சிபிஐ தலைமை அலுவலகத்தில் உள்ள தரைத்தளம் மற்றும் 4வது தள அலுவலகத்தில் வைத்து ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது.பொருளாதார குற்றப்பிரிவினர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர்.

3 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என சி.பி.ஐ. வட்டார தகவல் தெரிவிக்கின்றன.  சி.பி.ஐ. விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற வாதத்தை முன் வைத்து காவலில் எடுக்க சி.பி.ஐ. திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்வதால்,  காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்த சிபிஐ அழைத்து வந்து உள்ளது. ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி, விவேக் தன்கா ஆகியோரும் நீதிமன்றம் வருகை தந்துள்ளனர்.

மேலும் செய்திகள்