ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிக்க வைத்த இந்திராணி முகர்ஜி வாக்குமூலம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜியும், அவருடைய கணவர் பீட்டர் முகர்ஜியும் அளித்த வாக்குமூலங்கள் ப.சிதம்பரத்தை சிக்க வைத்துள்ளன.

Update: 2019-08-23 00:00 GMT
புதுடெல்லி, 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜியும், அவருடைய கணவர் பீட்டர் முகர்ஜியும் அளித்த வாக்குமூலங்கள் ப.சிதம்பரத்தை சிக்க வைத்துள்ளன.

இந்திராணி முகர்ஜி

தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜியும், அவருடைய மனைவி இந்திராணி முகர்ஜியும் ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமத்தின் உரிமையாளர்கள் ஆவர். இந்திராணி முகர்ஜி மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இவர்கள் அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலம்தான், ப.சிதம்பரத்தை சிக்க வைத்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறையிடம் இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலம் வருமாறு:-

கடந்த 2008-ம் ஆண்டு, எங்கள் நிறுவனத்துக்கு அன்னிய நேரடி முதலீட்டு வாரியத்தின் ஒப்புதலை பெறுவதில் சிக்கல் இருப்பதை நானும், என் கணவர் பீட்டர் முகர்ஜியும் உணர்ந்தோம். இந்த சிக்கலை தீர்க்க ப.சிதம்பரத்தை அணுகலாம் என்று பீட்டர் முடிவு செய்தார்.

அதன்படி, ப.சிதம்பரத்தை இருவரும் சந்தித்தோம். அவரிடம் பீட்டர் உரையாடலை தொடங்கினார். விண்ணப்ப நகலையும் அளித்தார். சிக்கலை புரிந்து கொண்ட ப.சிதம்பரம், தன்னுடைய மகன் கார்த்தி சிதம்பரத்தின் வர்த்தகத்துக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். அன்னிய நேரடி முதலீட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு பிரதி உபகாரமாக, கார்த்திக்கு வெளிநாட்டு வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு வலியுறுத்தினார்.

கார்த்தி பணம் கேட்டார்

டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தோம். அவருக்கு இந்த விஷயம் தெரிந்து இருந்தது. அவர் இந்த அனுமதிக்கு ஈடாக 10 லட்சம் அமெரிக்க டாலர் அளிக்க முடியுமா? என்று கேட்டார். அதற்கு பீட்டர், அது சாத்தியமில்லை என்று கூறியவுடன், தன்னுடைய நண்பர்களின் நிறுவனங்கள் என்று செஸ் மேனேஜ்மெண்ட், அட்வாண்டேஜ் ஸ்டேட்ரஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்களின் பெயரை தெரிவித்தார்.

அந்த நிறுவனங்களின் வெளிநாட்டு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துமாறு கூறினார். அவர்களை ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் ஆலோசகர்களாக காட்டிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

பண விவகாரங்களை பீட்டர்தான் கவனித்தார். அதனால் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று எனக்கு தெரியாது. செஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் எங்கள் குழுமத்தின் இயக்குனர் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

இவ்வாறு இந்திராணி முகர்ஜி கூறினார்.

பீட்டர் முகர்ஜி

அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் பீட்டர் முகர்ஜி கூறியதாவது:-

ப.சிதம்பரத்தை நான் இரண்டு, மூன்று தடவை சந்தித்தேன். எங்கள் விண்ணப்பத்தை கிடப்பில் போட்டு விடக்கூடாது என்பதற்காக சந்தித்தேன். அப்போது, தன் மகனின் வர்த்தக நலனை மனதில் வைத்துக்கொள்ளுமாறும், வாய்ப்பு கிடைத்தால், வெளிநாட்டு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதுபோல், என் மனைவியுடன் சேர்ந்து கார்த்தி சிதம்பரத்தையும் சந்தித்தேன். கார்த்தி, 10 லட்சம் டாலர் கேட்டார். அது சாத்தியமில்லை என்றவுடன், தன் நிறுவனங்களில் பணம் செலுத்துமாறு யோசனை தெரிவித்தார். அதன்படி, அவர் கேட்ட 10 லட்சம் டாலரில் ஒரு பகுதியாக ரூ.10 லட்சம், அட்வாண்டேஜ் நிறுவனத்துக்கு செலுத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பணம் செலுத்தப்பட்டதை அமலாக்கத்துறையும் தனது விசாரணையில் கண்டுபிடித்துள்ளது.

கைதான தலைவர்கள்

ஊழல் வழக்கில் கைதான அரசியல் தலைவர்கள் பட்டியல் மிக நீளமானது.

முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, லாலுபிரசாத் யாதவ், கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன், தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ் கல்மாடி, அமர்சிங் எம்.பி., இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பட்டியலில், ப.சிதம்பரமும் இணைந்துள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்

பிரபலமான வணிக குடும்பத்தில் பிறந்த ப.சிதம்பரம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர். அரசியலில் ஈடுபட முடிவு செய்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1969-ம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டபோது, இந்திரா காந்தி தலைமையிலான பிரிவில் சேர்ந்தார்.

1984-ம் ஆண்டு, மத்திய வர்த்தக இணை மந்திரி ஆனார். நரசிம்மராவ் அரசிலும் வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளை கவனித்தார். 1996-ம் ஆண்டு, மூப்பனாருடன் சேர்ந்து தமிழ் மாநில காங்கிரசை தொடங்கினார். மத்தியில், ஐக்கிய முன்னணி அரசில் நிதி மந்திரி ஆனார்.

பின்னர், காங்கிரசில் மீண்டும் சேர்ந்த அவர், மன்மோகன் சிங் அரசிலும் நிதி மந்திரி ஆனார். இடையில், உள்துறை மந்திரியாக இருந்தார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இருப்பினும், மராட்டிய மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக் கப்பட்டார்.

மேலும் செய்திகள்