ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப்பிரிவு சோதனை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப்பிரிவு சோதனையை மேற்கொண்டுள்ளது.

Update: 2019-08-23 11:24 GMT
ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயலுக்கு மேலும் சிக்கலாக அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக  மும்பை மற்றும் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கப்பிரிவு சோதனையை மேற்கொண்டு வருகிறது. 

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) விதிகளின் கீழ் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதை நோக்கமாக கொண்டு சோதனை மேற்கொள்ளப்படுகிறது என அமலாக்கப்பிரிவு தகவல்கள் குறிப்பிடுகின்றன. மும்பை மற்றும் டெல்லியில் உள்ள நரேஷ் கோயலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

நிதி நெருக்கடி காரணமாகவும், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தடுமாறியது. இதையடுத்து அந்த நிறுவனம் அனைத்து சேவைகளையும் ஏப்ரல் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.  கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் (எம்.சி.ஏ) ஆய்வு அறிக்கையில் விமான நிறுவனத்தின் நிதி பரிமாற்றத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜூலையில் தகவல் வெளியாகியது. 

ஜெட் ஏர்வேஸ் தற்போது 8,500 கோடிக்கு மேல் அதிகமான கடனில் சிக்கியுள்ளது. நிலுவையில் உள்ள சம்பளம் உட்பட பல்வேறு கடன்களை கருத்தில் கொண்டால் விமான நிறுவனம் ரூ.11,000 கோடிக்கு மேல் கடனில் இருக்கிறது. நரேஷ் கோயல் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகினார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்