ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை 3-ந்தேதி வரை கைது செய்ய தடை - சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில் வருகிற 3-ந்தேதி வரை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைதுசெய்ய தடை விதித்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2019-08-23 22:30 GMT
புதுடெல்லி,

ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதில் முறைகேடு நடந்ததாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி அமர்வில் நடைபெற்று வருகிறது. ப.சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், ஏற்கனவே இருவரையும் கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடை நேற்றுடன் முடிந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், ஏற்கனவே ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை 27-ந்தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தற்போது இந்த வழக்கின் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதற்கு நீதிபதி ஓ.பி.சைனி, நீங்கள் இந்த வழக்கில் வாதாட விரும்பவில்லை என்பதை தவிர வேறு மாற்றம் ஏதுமில்லை. இந்த விசாரணை பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏன் ஒவ்வொரு முறையும் ஒத்திவைக்க கோருகிறீர்கள்? வாதாட வேண்டும் என்றால் முன்வாருங்கள். இனி ஒத்திவைக்க முடியாது என்று கூறினார்.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள், வாய்தா என்பது உரிமை கிடையாது. இதற்கு பின்னணியில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. இதுவரை 10 முறை வாய்தா வாங்கி இருக்கிறார்கள். இதுபோல எப்போதும் நடைபெற்றது கிடையாது. அரசு தரப்பின் வாய்தா கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் செப்டம்பர் 3-ந்தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அதற்கு முன்பு எந்த தேதியிலும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு ஆஜராகி வாதாடலாம். செப்டம்பர் 3-ந்தேதி வரை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்