‘ப.சிதம்பரத்தை ஜாமீனில் எடுக்க தவறிவிட்டனர்’ - வக்கீல்கள் மீது, திக்விஜய் சிங் சகோதரர் குற்றச்சாட்டு

ஐ.என்.எக்ஸ். வழக்கில், ப.சிதம்பரத்தை ஜாமீனில் எடுக்க தவறிவிட்டனர் என வக்கீல்கள் மீது, திக்விஜய் சிங் சகோதரர் குற்றச்சாட்டு சுமத்தினார்.

Update: 2019-08-23 22:14 GMT
போபால்,

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் கடந்த 21-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் வக்கீல்கள் மீது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கின் சகோதரரும், மத்திய பிரதேச எம்.எல்.ஏ.வுமான லட்சுமண் சிங் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஐ.என்.எக்ஸ். வழக்கில் நிரபராதி என ப.சிதம்பரம் வெளியே வருவார் என நம்புகிறேன். ஆனால் அவரது வக்கீல்களான நமது சிறந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வர தவறியதுதான் எனக்கு வருத்தத்தை கொடுத்து உள்ளது’ என்று தெரிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் அவர் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரம் சார்பில் மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்களான கபில்சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்