ஜம்மு-காஷ்மீர்: மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி, 25 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரில் மினி பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-08-25 17:58 GMT
ரஜோரி,

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கனேட்டர் கிராமத்தில் இருந்து ரஜோரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான ஷாட்ரா ஷெரீப் என்ற புனித தலத்திற்கு 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  

இன்று மதியம் தேரா கி கலி பகுதிக்கு அருகிலுள்ள மேகி மோர் என்ற இடத்தில் சென்ற போது, பஸ் ஒரு வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 1000 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

இந்த விபத்தில் இறந்தவர்களாக அப்துல் கயூம், முகமது பீர் (48), முகமது ரபீக் (50), மசராத் பி (20), கனீசா பி (45), ஹசீனா பி (33) மற்றும் மன்ஷா பேகம் (60) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காவல்துறையினர் 279, 304-ஏ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்