சுஷ்மா, ஜெட்லி மறைவுக்கு எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டும் பா.ஜனதா பெண் எம்.பி.

சுஷ்மா, ஜெட்லி மறைவுக்கு தீயசக்தியை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் மீது பா.ஜனதா பெண் எம்.பி. சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-26 10:02 GMT
போபால்,

பா.ஜனதா மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி பாபுலால் கவுர் ஆகியோர் சமீபத்தில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதில் பாபுலால் கவுர் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று போபாலில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நடந்தது.

இதில் பெண் சாமியாரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரக்யா சிங் தாகூர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் தீய சக்தியை பயன்படுத்தியதால்தான் பா.ஜனதா தலைவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்ததாகவும், இந்த சம்பவங்களுக்கு பின்னால் சாத்தானின் சக்தி இருப்பதாகவும் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘எங்களுக்கு கெட்ட நேரம் காத்திருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் கொல்லும் சக்தியை பயன்படுத்தி வருவதாகவும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு மகராஜ் என்னிடம் கூறினார். பின்னர் அதை நான் மறந்து விட்டேன். ஆனால் தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைகின்றனர். இதை பார்க்கும்போது அந்த மகராஜ் கூறியது உண்மைதானோ என எண்ண வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளேன்’ என்று தெரிவித்தார்.

பிரக்யாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் ஏற்கனவே பலமுறை சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி சிக்கலில் மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்