மாமியார் மூக்கை கடித்த மருமகன், காதை அறுத்த தந்தை

வரதட்சணை தகராறில் மாமியார் மூக்கை கடித்தார் மருமகன். அவரது தந்தை காதை அறுத்து உள்ளார்.

Update: 2019-08-26 10:40 GMT
பரேலி,

உத்தர பிரதேசம்  பரேலியில் உள்ள நகாட்டியா பகுதியில்  நேற்று இரண்டு குடும்பங்களுக்கிடையில் வரதட்சணை மோதல் ஒரு அசிங்கமான திருப்பத்தை ஏற்படுத்தியது

பரேலியை சேர்ந்தவர் காந்தா ரெஹ்மான், இவரது மகள் சாந்த்பி.  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் முகமது அஷ்பக் என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.    

ரெஹ்மான்  திருமணத்தின் போது தனது மகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள வரதட்சணை கொடுத்தார். இந்நிலையில் சாந்த்பி, ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு அவரது மாமியார்  ரூ.5 லட்சம் கூடுதலாக கோரத் தொடங்கினர். ரெஹ்மான் மறுத்தபோது, அஷ்பக்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மனைவி சாந்த்பியை அடித்து துன்புறுத்தினார்.

இது குறித்து கேள்விப்பட்ட ரெஹ்மான், தனது  மனைவி குல்ஷனுடன்  தனது  மகளின் வீட்டிற்கு  வந்தார். அங்கு இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  அஷ்பக்கின் தந்தை இஷார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் ரெஹ்மான் மற்றும் குல்ஷன்  இருவரையும்  அடித்து உதைத்து உள்ளனர்.

மருமகன்  அஷ்பக்,  மாமியார் குல்ஷனின் மூக்கை கடித்து உள்ளார். அஷ்பக்கின் தந்தை இஷார்,  குல்ஷனின் காதை கத்தியை கொண்டு அறுத்து உள்ளார்.  இதில் குல்ஷன் மயக்கம் அடைந்தார். 

இதை தொடர்ந்து அஷ்பக்கும், அவரது தந்தையும் தலைமறைவாகி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  காயமடைந்த குல்ஷனை  மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அறுவை சிகிச்சைக்காக டெல்லிக்கு அவர் அனுப்பப்பட்டார்.

ஐபிசி பிரிவுகள் 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல்), 326 (தானாக முன்வந்து ஆபத்தான ஆயுதத்தால் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 504 ( வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல் ) ஆகிய பிரிவுகளின்  கீழ் பரேலி கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்