உத்தரபிரதேசத்தில் வாகனங்கள் மீது அடுத்தடுத்து லாரி மோதல்; 17 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் வாகனங்கள் மீது அடுத்தடுத்து லாரி மோதியதில் 17 பேர் பலியாகினர்.

Update: 2019-08-27 13:42 GMT
லக்னோ,

உத்தரபிரதேசத்தில் லக்னோவிலிருந்து 170 கி.மீ. வடமேற்கே ஷாஜகான்பூர் மாவட்டத்தில் லாரி ஒன்று இரண்டு வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.  4 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் லாரி முதலில் ஒரு டெம்போ மீது மோதியது.  பின்னர் ஒரு வேன் மீதும் மோதியது.  இதில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. பின்னர் லாரி கவிழ்ந்து வேன் மீது விழுந்தது.  இதனால் வேனுக்குள் இருந்தவர்கள் சிக்கி கொண்டனர்.

இந்த விபத்தில், 6 முதல் 12 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மருத்துவமனைக்கு காயங்களுடன் கொண்டு செல்லப்பட்ட பெண் ஒருவர் வழியிலேயே உயிரிழந்து உள்ளார்.  லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.  அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டார்.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தோருக்கு முறையான சிகிச்சை அளிக்கும்படியும் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விதிகளின்படி இழப்பீட்டு தொகை வழங்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்