உத்தரபிரதேசத்தில், தரை இறங்கும்போது விபத்து - விமானம் மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது

உத்தரபிரதேசத்தில், தரை இறங்கும்போது, விமானம் ஒன்று மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த விமானி உள்பட 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Update: 2019-08-27 22:00 GMT
அலிகார்,

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே தானிப்பூரில், விமான பயிற்சி மையத்துக்கு சொந்தமான விமான தளம் உள்ளது. நேற்று 6 பேர் கொண்ட ஒரு தனி விமானம் அங்கு தரை இறங்க வந்தது.

ஒரு விமான நிறுவனத்தின் விமானத்தை பழுது பார்ப்பதற்காக, டெல்லியில் இருந்து என்ஜினீயர்கள், அந்த விமானத்தில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

தரை இறங்கும்போது, உயர் அழுத்த மின்கம்பியில், விமானம் உரசியது. பின்னர், தரையில் விழுந்து தீப்பிடித்துக் கொண்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், விமானம் முழுமையாக எரிந்து விட்டது.

இந்த விபத்தில், 2 விமானிகள், 4 என்ஜினீயர்கள் என 6 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

கிஷோர், தீபக் ஆகியோர் விமானிகள் ஆவர். ராம்பிரகாஷ் குப்தா, பிரபாத் திரிவேதி, ஆனந்த் குமார், கார்த்திக் ஆகியோர் என்ஜினீயர்கள் ஆவர்.

மேலும் செய்திகள்