ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் வரும் திங்கட்கிழமை வரை ப.சிதம்பரம் காவல் நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் வரும் திங்கட்கிழமை வரை ப.சிதம்பரம் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-08-30 10:29 GMT
புதுடெல்லி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

பின்னர் அவரை தங்கள் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் அவரை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில்   ஆஜர்படுத்தி  26 ந்தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் 26 ந்தேதி  ஆஜர்படுத்தி 30 ந்தேதி வரை  காவலில்  எடுத்து விசாரித்தனர்.

ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் காவல் இன்றுடன்  முடிவடைவதால், அவர் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிதம்பரத்தின் காவலை  5 நாட்கள் நீட்டிக்குமாறு சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி வரை இதுவரை 400 கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது. சிதம்பரத்திடம் கேட்கப்படவேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன. சிதம்பரத்திடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

ஒருவரை எந்த ஆவணமும் இல்லாமல், ஆதாரமும் இல்லாமல் காவலில் வைத்திருக்க முடியாது என நீதிபதி கூறினார். ஏன் எதற்கு 5 நாள் காவல் போதும் என்று கூறினீர்கள். காவல் நீட்டிப்பிற்கு வலுவான காரணங்கள் இல்லை என கூறினார். வரும் திங்கட்கிழமை வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்