ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரம் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திடம் நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

Update: 2019-08-30 22:30 GMT
புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, அவரை சி.பி.ஐ. கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் அமலாக்கத்துறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர், இது தொடர்பான உத்தரவு வருகிற செப்டம்பர் 5-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்றும், அதுவரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது என்றும் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த மனுவின் மீதான விசாரணையின் போது ப.சிதம்பரம் தரப்பில் முன்வைத்த வாதத்தில், “கடந்த 19.12.2018, 8.1.2019, 21.1.2019 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களை அவரிடம் காட்டாமல் நேரடியாக கோர்ட்டுக்கு ‘சீல்’ வைத்த உறையில் தாக்கல் செய்தால், அதனை கோர்ட்டு பரிசீலனைக்கு எடுக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அமலாக்கத்துறை தரப்பில், “குற்றம் சாட்டப்பட்டவருக்கு காட்டினாலும், காட்டவில்லை என்றாலும் அந்த ஆவணங்களை பார்ப்பதற்கு கோர்ட்டுக்கு அதிகாரம் இருக்கிறது” என்று வாதிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த ஆவணங்களை ‘சீல்’ வைத்த உறையில் வைத்து தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த ஆவணங்கள் குறித்து கோர்ட்டு முடிவெடுக்கும் என்று தெரிவித்தனர்.

அதன்படி, விசாரணை தொடர்பான ஆவணங்களை சீலிட்ட உறையில் வைத்து அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வில் தாக்கல் செய்தார்.

மேலும் செய்திகள்