பா.ஜ.க.வினருக்கு ஆளுநர் பதவி அளித்தது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது; நாராயணசாமி பேட்டி

பா.ஜ.க.வினருக்கு ஆளுநர் பதவி அளித்திருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என நாராயணசாமி பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2019-09-02 04:43 GMT
புதுச்சேரி,

தெலுங்கானா ஆளுநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து வரும் அவரது பதவி காலம் வருகிற டிசம்பரில் முடிவடைய உள்ளது.  கேரள ஆளுநராக இருந்து வந்த சதாசிவம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதேபோன்று இமாச்சல பிரதேச ஆளுநராக பா.ஜ.க. மூத்த தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டு உள்ளார்.  இதனால் இமாச்சல பிரதேச ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தானின் ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார்.  மகாராஷ்டிர ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தமிழகத்தை சேர்ந்த தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி.  அவருக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

சர்காரியா கமிஷனில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநராக நியமிக்க கூடாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.  பா.ஜ.க.வை சேர்ந்தவர்களுக்கு ஆளுநர் பதவி அளித்திருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்