கூவம் நதி மாசு அடைந்த விவகாரம்: தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்டு

கூவம் நதி மாசு அடைந்த விவகாரத்தில் தமிழக அரசு ரூ.100 கோடி அபராத தொகையை செலுத்த தேவையில்லை என கூறி அரசின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.

Update: 2019-09-02 06:55 GMT
புதுடெல்லி,

சென்னையில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டதாகவும் அதை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்ளிட்ட சிலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள் சாக்கடையாகவே மாறிவிட்டன என்றும் இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இது காட்டுகிறது என்றும் கூறி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும், எனினும் இதில் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு நிபுணர் குழு ஒன்றை அமைப்பதாகவும் அந்த குழுவின் சிபாரிசு அறிக்கையுடன் தலைமை செயலாளர் தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

அதன்படி அப்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜராகி நிபுணர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதற்கிடையே தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வில் நடைபெற்றது.

தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன் ஆஜரானார்.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் தீர்ப்பாயத்தின் உத்தரவில் தமிழக அரசு மீது குறிப்பிட்டு அபராத தொகை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் எனவே தமிழக அரசு அபராதம் எதுவும் கட்ட தேவை இல்லை என்பதால் வழக்கை முடித்து வைப்பதாகவும் கூறினர்.

மேலும் செய்திகள்