பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பிரதமர் முயற்சிக்க வேண்டும்; சுதீன் தவாலிகர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டும் என கோவா முன்னாள் துணை முதல் மந்திரி கேட்டு கொண்டுள்ளார்.

Update: 2019-09-11 12:23 GMT
பனாஜி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்தது.  பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்று கொண்டார்.

அவர் பதவியேற்ற பின்பு முத்தலாக் தடை சட்ட மசோதா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்ட பிரிவு 370ஐ நீக்கியது உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டது.  பதவியேற்ற 100 நாட்களுக்குள் அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை பல அரசியல் கட்சிகள் வரவேற்று வருகின்றன.

கோவாவில் முதல் மந்திரி பிரமோத் சவாந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசில் துணை முதல் மந்திரியாக பதவி வகித்தவர் சுதீன் தவாலிகர்.  இவரது மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியானது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தது.  இதன்பின்பு கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகி விட்டது.  சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கியது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என கூறியுள்ள தவாலிகர், மோடி தலைமையிலான அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவித்து நம் நாட்டுடன் இணைக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று முத்தலாக்கிற்கு தடை விதிக்க வழிவகை செய்தது, இஸ்ரோவின் முக்கியத்துவம் வாய்ந்த நிலவுக்கு விண்கலம் அனுப்பும் சந்திரயான்-2 திட்ட வெற்றி ஆகியவற்றையும் அவர் புகழ்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்