இந்திரா காந்தியை இந்தியா காந்தி என டுவிட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சசி தரூர்

இந்திரா காந்தியை இந்தியா காந்தி என டுவிட்டரில் பதிவிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் சர்ச்சையில் சிக்கினார்.

Update: 2019-09-24 11:26 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அமெரிக்காவில் சென்றிறங்கிய பிரதமர் மோடியை இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.  அங்கு அவருக்கு சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன்பின்பு அவர், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்பட்டது.

இதனிடையே, பிரதமர் மோடிக்கு புலம் பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பினை கிண்டல் செய்யும் வகையில், முன்னாள் பிரதமர்களான நேரு மற்றும் அவரது மகள் இந்திரா காந்தி ஆகியோர் திறந்த வாகனமொன்றில், திரண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே சென்ற புகைப்படங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் டுவிட்டரில் வெளியிட்டு, கடந்த 1954ம் ஆண்டு நேரு மற்றும் இந்தியா காந்தி அமெரிக்காவில் இருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படமிது.

சிறப்பு மக்கள் தொடர்பு பிரசாரமோ, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை திரட்டும் மேலாண்மை வசதியோ அல்லது ஊடக விளம்பரமோ என எதுவும் இல்லாத நிலையில், அதிக அளவில் அமெரிக்க மக்கள் ஆர்வமுடன் திரண்டுள்ளனர் என்பதனை கவனியுங்கள் என தெரிவித்து உள்ளார்.

சசி தரூரை, டுவிட்டரில் 71 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.  அவர்கள் பதிலுக்கு, நேரு மற்றும் இந்திரா காந்தி ரஷ்யாவுக்கு பயணம் செய்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என தெரிவித்து உள்ளனர்.  அதனுடன், இந்தியா காந்தி அல்ல, அது இந்திரா காந்தி என்றும் சிலர் தரூரை கேலி செய்துள்ளனர்.

இதன்பின் தரூர் வெளியிட்ட செய்தியில், இது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல.  ரஷ்யாவில் எடுத்த புகைப்படம் என சிலர் தெரிவித்து உள்ளனர்.  அப்படி இருப்பினும் கூட, புகைப்படத்துடன் கூடிய செய்தியில் மாற்றமில்லை.  முன்னாள் பிரதமர்கள் இருவரும் வெளிநாட்டில் கூட பிரபலம் வாய்ந்தவர்களாகவே இருந்துள்ளனர்.  நரேந்திரமோடி கவுரவிக்கப்பட்ட பொழுது, இந்திய பிரதமர் அலுவலகம் கவுரவிக்கப்பட்ட பொழுது, இந்தியாவுக்கு கிடைத்த மரியாதை அது என்று டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்