போதுமான வெங்காயம் இருப்பு உள்ளது- மத்திய உணவுத்துறை

போதுமான வெங்காயம் இருப்பு உள்ளது. தேவையான அளவு வெங்காயத்தை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என மத்திய உணவுத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-09-25 11:35 GMT
புதுடெல்லி

பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மராட்டியம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இங்கு வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இங்கிருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், திடீர் என அனைத்து மாநிலங்களிலும் விலை  அதிகரித்து உள்ளன.

கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 வரை விற்பனையான நிலையில், திடீரென ரூ.80 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

வெங்காய விலை உயர்வுக்கு கனமழையே காரணம் என்று சொல்லப்பட்டாலும், பதுக்கலும், வர்த்தக சூதாட்டமும்தான் காரணம் என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பாஸ்வான் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

போதுமான வெங்காயம் இருப்பு உள்ளது. தேவையான அளவு வெங்காயத்தை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திரிபுரா, ஹரியானா, ஆந்திர மாநிலங்கள் கோரிய அளவு ஏற்கனவே வெங்காயம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு   கிலோ ரூ. 15.59-க்கு வெங்காயம் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்