காஷ்மீர் எல்லையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு - பயங்கரவாதிகள் அச்சுறுத்தலா?

மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து காஷ்மீர் எல்லையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-29 21:59 GMT
ஜம்மு,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை முன்னிட்டு போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜம்மு பிராந்தியத்தில் ஏற்கனவே விலக்கிக்கொள்ளப்பட்டன. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை சுமுகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஜம்மு பிராந்தியத்துக்கு உட்பட்ட பூஞ்ச் மாவட்டத்தின் எல்லையோர நகரமான மெந்தாரில் பல இடங்களில் நேற்று அல்-பதர் முஜாகிதீன் என்ற அமைப்பு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் வழக்கமான அலுவல்களில் ஈடுபடும் கடைக்காரர்கள், தொழிலாளர்கள், பயணிகள், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உருது மொழியில் எழுதப்பட்டு இருந்தது.

இதைப்பார்த்த பாதுகாப்பு படையினர் அந்த சுவரொட்டிகளை பறிமுதல் செய்ததுடன், இது தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த மாவட்டம் பயங்கரவாதிகள் இல்லா மாவட்டம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த சுவரொட்டியின் பின்னணியில் ஏதாவது பயங்கரவாத அமைப்புகள் உள்ளனவா? என விசாரணை நடந்து வருகிறது.

இந்த சுவரொட்டி விவகாரம் காஷ்மீர் எல்லையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்