எனக்கு சரியாக சாப்பாடு போடுவதில்லை - லல்லு மருமகள் குற்றச்சாட்டு

எனக்கு சரியாக சாப்பாடு போடுவதில்லை. லல்லு பிரசாத்தின் மனைவியும், மகளும் என்னை தாக்கினார்கள் என்று அவரது மருமகள் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-09-30 07:44 GMT
பாட்னா,

ராஷ்ட்ரிய ஜனதா தள  தலைவர் லல்லுபிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப்புக்கும், ஐஸ்வர்யாராய் என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் ஆன 6 மாதத்திலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தேஜ்பிரதாப் யாதவ் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் ஐஸ்வர்யாராய் லல்லுவின் வீட்டிலேயே தங்கி உள்ளார்.

அவர் ஏற்கனவே மாமியார் ராப்ரிதேவி, மற்றும் லல்லுவின் மகள் மிசா பாரதி ஆகியோர் மீது புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டு முன்பு நிருபர்களை அழைத்து ஐஸ்வர்யா ராய் தனது மாமியார் மற்றும் மிசா பாரதி மீது ஏராளமான புகார்களை கூறினார்.

எனது கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தாலும் இன்னும் விவாகரத்து வழங்கப்பட வில்லை. இன்னும் அவருடைய மனைவியாக இந்த வீட்டில் வசித்து கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த வீட்டில் எல்லா உரிமையும் உள்ளது.

ஆனால் என்னை எனது மாமியார் ராப்ரிதேவியும், மிசா பாரதியும் அடித்து துன்புறுத்துகிறார்கள். என்னை வீட்டை விட்டு வெளியே செல் என்று வலுக்கட்டாயமாக தள்ளி விட்டார்கள். ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் இருந்து எனக்கு சரியாக சாப்பாடு போடுவதில்லை. நேற்று மாலையிலிருந்து முற்றிலும் சாப்பாடு தரவில்லை.

சமையல்கூடத்தை பூட்டி சாவியை அவர்கள் வைத்துள்ளனர். இதனால் சாப்பிட முடியவில்லை. சமையல் அறை சாவி எங்கு இருக்கிறது என்று கேட்டபோது என்னை தாக்கினார்கள். என்னால் தண்ணீர்கூட குடிக்க முடியவில்லை. மிசா பாரதியின் உதவியாளர் எனது போனை பறிக்க முயன்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பெண்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று ஐஸ்வர்யா ராய்க்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக கூறியது. இதன் தலைவர் பிரமிளா கூறும்போது, 

இந்த வி‌ஷயம் மிக முக்கியமானது. ஐஸ்வர்யாராயின் புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே லல்லு குடும்பத்தினர் இதுபற்றி கூறும்போது, ஐஸ்வர்யா ராய் திருமணமாகி வந்ததில் இருந்து சிறிய வி‌ஷயத்தை கூட பெரிய பிரச்சினையாக்க முயற்சிக்கிறார் என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும் செய்திகள்