பஞ்சாபில் ஆளில்லா விமானம் மூலம் ஆயுதங்களை போட்ட விவகாரம்: காலிஸ்தான் பயங்கரவாதி கைது

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் ஆயுதங்களை போட்டதில் தொடர்பு உள்ள காலிஸ்தான் பயங்கரவாதியை பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2019-10-02 22:30 GMT
அமிர்தசரஸ்,

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வரும் பாகிஸ்தான், இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை அனுப்ப எடுத்து வரும் அனைத்து நடவடிக்கையையும் இந்திய ராணுவம் முறியடித்து வருவதால் பாகிஸ்தான் கடும் அதிருப்தியில் உள்ளது.

இந்த நிலையில் தான் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் மூலம் இந்திய எல்லைக்குள் ஆயுதங்களை போடும் நடவடிக்கையில் இறங்கியது. அந்த வகையில் சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் தரன்தரன் மாவட்டத்தில் உள்ள ஜகபால் என்ற இடத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் பயங்கர ஆயுதங்களை போட்டது.

இதுபற்றி பஞ்சாப் மாநில சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு, தீவிர விசாரணைக்கு பின்னர் காலிஸ்தான் பயங்கரவாதி ஒருவனை பஞ்சாப் மாநிலம் கல்சா கல்லூரி பகுதியில் நேற்று காலை கைது செய்தது. விசாரணையில் கைதான பயங்கரவாதி பெயர் சஜன் பிரீத் சிங் என்பதும், இவன் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையுடன் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்தது.

கைதான பயங்கரவாதி பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள ஜகபால் பகுதியில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை அழிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவன் அதில் இருந்த 2 துப்பாக்கிகளை விற்பனை செய்த பின்னர், அந்த விமானத்தை எரிக்க முயன்றதாக மற்றொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்