ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரிக்கிறது.

Update: 2019-10-04 04:40 GMT
புதுடெல்லி, 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அவரை டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.

விசாரணை தொடங்கியதும், சி.பி.ஐ. தரப்பில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க அனுமதி கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ப.சிதம்பரத்துக்கு சிறைக்கு வெளியே மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பிறகு சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹர், ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை வருகிற 17-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே, இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு தனக்கு ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்தும், தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய கோரியும் ப.சிதம்பரம் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது. 

மேலும் செய்திகள்