வயநாடு-மைசூரு சாலையை திறக்கக்கோரி கேரள இளைஞர்கள் உண்ணாவிரதம் - ராகுல்காந்தி நேரில் ஆதரவு

கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் இளைஞர்களை ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.

Update: 2019-10-04 23:00 GMT
திருவனந்தபுரம்,

கர்நாடக மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான வயநாடு-மைசூரு இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த பாதை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக செல்கிறது. வயநாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல இதுதான் முக்கியமான பாதையாகும்.

இந்நிலையில் இரவு நேரங்களில் இவ்வழியாக வாகனங்கள் செல்வதால் வனவிலங்குகள் அடிபட்டு இறப்பதாக கூறி கர்நாடக அரசு இரவில் இந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பாதையில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதுதொடர்பாக கர்நாடக அரசுடன் கேரள அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இரவு நேரங்களில் இந்த பாதையை திறக்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

இந்த நிலையில் பகலிலும் இப்பாதையில் வாகனங்கள் செல்ல கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வயநாடு மாவட்டம் பத்தேரியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வயநாடு-மைசூரு சாலையை திறக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வயநாடு எம்.பி.யான ராகுல் காந்தி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் பயணிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு உள்ளன. இந்த தடையால் கேரளா-கர்நாடகா ஆகிய இரு மாநில மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் இதற்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும். இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்புவேன்.

இந்தியாவின் மிகப்பெரிய பலமே அதன் பொருளாதாரம் தான். அந்த பொருளாதாரத்தை சிதைத்தது பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜனதாவும் தான். எதற்காக மிகப்பெரிய அளவில் வேலையில்லாத நிலையை உருவாக்கினார்? என்பது தான் மிகப்பெரிய விவாதமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை, ராகுல் காந்தி பந்திப்பூர் சாலை பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்