மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கைது

மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-10-05 04:42 GMT
மும்பை,

தொடர்ந்து பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்க மெட்ரோ ரெயில் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆரேகாலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. 

இது சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, மரங்களை வெட்டும் பணி நேற்று இரவு துவங்கியது. 

இதற்காக புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.  வார இறுதி நாள் என்பதால், நீதிமன்றத்துக்கு விடுப்பு எனவும் அதன்பிறகு தசரா விடுமுறை உள்ள சூழலில், கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டும், ஆனால், நீதிமன்றம் மீண்டும் திறக்கும் போது, இங்குள்ள மரங்கள் எல்லாம் மாயமாகிவிடும், அரசின் செயல் சட்ட விரோதமானது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். 

மேலும் செய்திகள்