பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு

பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று தசரா விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

Update: 2019-10-09 00:00 GMT
புதுடெல்லி,

டெல்லியில் நேற்று துர்கா ஸ்ரீராம் லீலா சொசைட்டி சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டது. இதில் 107 அடி உயர ராவணன், கும்பகர்ணன், மேகநாத் ஆகியோரின் உருவபொம்மைகள் பசுமை பட்டாசுகளால் அமைக்கப்பட்டிருந்தன. தீயசக்திகளை அழிக்கும் வகையில் அவை தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரின் வேடமிட்டவர்கள் நெற்றியில் திலகமிட்டார். ராவணன் உருவபொம்மைக்கு அம்பு மூலம் தீவைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நமது நாட்டில் திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. திருவிழாக்களின் பூமி இந்தியா. திருவிழாக்கள் தான் நம்மை இணைக்கிறது. நவராத்திரி விழாவின்போது பெண் கடவுள்களை வணங்குகிறோம். இந்த சக்தியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேலும் அதிகரிக்க மக்கள் பணியாற்ற வேண்டும். அவர்களது பெருமையை பாதுகாக்கவும் பணியாற்ற வேண்டும்.

இந்த தீபாவளிக்கு சாதனைகள் புரிந்த அல்லது மற்றவர்களை ஈர்த்த நமது மகள்களை வாழ்த்து வோம். நமது விமானப்படை தினமும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய விமானப்படையால் நாடு பெருமை அடைகிறது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் இந்த விஜயதசமி விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டில் காந்தியின் கொள்கைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். அதாவது உணவை வீணாக்கக் கூடாது. மின்சாரத்தையும், தண்ணீரையும் சேமிக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் செய்திகள்