காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு எதிராக போராட்டம்; பரூக் அப்துல்லாவின் சகோதரி கைது

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370ஐ நீக்கியதற்கு எதிராக போராட்டம் நடத்திய பரூக் அப்துல்லாவின் சகோதரி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-10-15 09:34 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ந்தேதி ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனை அடுத்து, காஷ்மீரில் இயல்பு நிலை சீரடைந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.  அரசின் முடிவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்பதால், முன்னாள் முதல் மந்திரிகள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.  எம்.பி.யும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரிகள் உள்பட பலர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சுற்றுலாப்பயணிகள் மீண்டும் ஜம்மு காஷ்மீர் வருகை தருமாறு கடந்த சில தினங்களுக்கு முன் அம்மாநில அரசு நிர்வாகம் அறிவித்தது.  தரைவழி தொலைபேசி தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370ஐ நீக்கியதற்கு எதிராக முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரைய்யா மற்றும் மகள் சபியா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கும்படி அவர்கள் வலியுறுத்தினர்.  அவர்களை போலீசார் கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்