நாசிக்கில் பலத்த மழை: அமித்ஷா ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது

நாசிக்கில் பலத்த மழை காரணமாக, அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது.

Update: 2019-10-19 20:36 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜனதா - சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 2 வாரமாக சூறாவளி பிரசாரம் செய்து வந்தார். பிரசாரத்திற்கு கடைசி நாளான நேற்று காலை அவர் நந்தூர்பர் மாவட்டத்தில் உள்ள நவாப்பூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர் அவர் அகமதுநகர் மாவட்டம் அகோலேவில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹெலிகாப்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென பலத்த மழை பெய்தது.

மோசமான வானிலை காரணமாக விமானி ஹெலிகாப்டரை தரையிறக்க முடிவு செய்தார். இதன்படி அமித்ஷா பயணம் செய்த அந்த ஹெலிகாப்டர் நாசிக் ஓசார் விமான நிலையத்தில் அவசரமாக பிற்பகல் 2.25 மணியளவில் தரையிறக்கப்பட்டது. அங்கு 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மழை நின்றதும் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அகமதுநகர் புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்