பீகார், மராட்டியத்தில் 2 எம்.பி. தொகுதி தேர்தல்: பஸ்வான், பவார் கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றி

பீகார், மராட்டியத்தில் 2 எம்.பி. தொகுதி தேர்தலில், பஸ்வான், பவார் கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றிபெற்றது.

Update: 2019-10-24 21:00 GMT
புதுடெல்லி,

பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் எம்.பி. தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளது.

இங்கு மறைந்த ராமச்சந்திர பஸ்வான் எம்.பி.யின் மகன் பிரின்ஸ் ராஜ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமாரை விட 1 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு கூடுதலாக வாங்கி வெற்றி பெற்றார்.

மராட்டிய மாநிலம் சதாரா தொகுதியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக இருந்த உதயன்ராஜே படேல், பாரதீய ஜனதாவுக்கு தாவியதால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதில் உதயன்ராஜே படேல் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக களம் இறங்கி தோல்வியை தழுவினார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாஸ் படேல் 85 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியை தேசியவாத காங்கிரஸ் தக்க வைத்துள்ளது.

மேலும் செய்திகள்