மராட்டியத்தில் புதிய அரசு அமையும் விவகாரம்: நாங்கள் யாருடனும் கலந்துரையாடவில்லை - மல்லிகார்ஜுன் கார்கே

மராட்டியத்தில் புதிய அரசு அமையும் விவகாரத்தில் நாங்கள் யாருடனும் கலந்துரையாடவில்லை என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-02 08:07 GMT
மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 161 இடங்களை கைப்பற்றிய இரு கட்சிகளும் உடனடியாக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும், மந்திரி பதவிகளை சரிசமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார். அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் பாரதீய ஜனதாவை வலியுறுத்தினார்.

ஆனால் சிவசேனாவுக்கு ஆட்சியில் சமபங்கு வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை என்று பா.ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்றுடன் 10 நாட்கள் ஆன போதிலும், புதிய அரசு அமையும் விவகாரம் ‘கிணற்றில் போட்ட கல்’ போல உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சட்டசபையின் பதவி காலம் வருகிற 9-ந் தேதி முடிவதால், அதற்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கூறுகையில்,  நாங்கள் சிவசேனாவுடன் சேர்ந்து  புதிய  அரசு அமைப்பது  பற்றி ஆலோசித்து  வருகிறோம் , ஆனால்  பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டதாக சிவசேனா அறிவிக்க வேண்டும். பாஜகவுடன் பேரம் பேசுவதற்காக சிவசேனா எங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்பது எங்கள் கருத்து என கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

மராட்டியத்தில் புதிய அரசு அமையும் விவகாரத்தில் நாங்கள் யாருடனும் கலந்துரையாடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  எதிர்க்கட்சியில் அமர மக்கள் எங்களுக்கு உரிமைகளை வழங்கியுள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்