அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி சாவு

அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்தாள். 18 மணி நேர மீட்பு போராட்டம் தோல்வி அடைந்தது.

Update: 2019-11-04 05:50 GMT
சண்டிகார்,

அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங்புரா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, நேற்றுமுன்தினம் தனது வீடு அருகே உள்ள வயலில் விளையாட சென்றாள். நீண்ட நேரமாகியும் அவள் திரும்பி வரவில்லை.

அதனால், அவளை பெற்றோர் தேடத் தொடங்கினர். அந்த வயலில் அவர்களது குடும்பம் தோண்டி, பயன்பாடு அற்ற நிலையில் ஒரு ஆழ்துளை கிணறு உள்ளது. அந்த 30 அடி ஆழ கிணற்றில் அவள் விழுந்திருப்பாள் என்ற சந்தேகம் எழுந்தது.

அங்கு சென்று பார்த்தபோது, கிணற்றுக்குள் சிறுமி விழுந்திருப்பதை அறிந்து பெற்றோர் கதறித் துடித்தனர். தலைகீழாக விழுந்ததால், அவளது கால் மட்டும் தெரிந்தது.

உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு பணி தொடங்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறுமி சுவாசிப்பதற்காக, கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அவளது அசைவை கண்காணிப்பதற்காக, கேமரா பொருத்தப்பட்டது. பெற்றோரை பேச வைத்து, அந்த ஆடியோ பதிவு, சிறுமிக்கு கேட்கும்படி ஒலிக்கச் செய்யப்பட்டது. ஆனால், சிறுமியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.

18 மணி நேர மீட்பு போராட்டத்துக்கு பிறகு, ஆள்துளை கிணற்றில் இருந்து சிறுமி மீட்கப்பட்டாள்.

உடனே, கர்னாலில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அவளை கொண்டு சென்றனர். அவளை பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதைக்கேட்டு பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

மேலும் செய்திகள்