எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது, பிரதமர் மோடி இந்த பிரச்சினையை கவனிக்க வேண்டும் -மம்தா பானர்ஜி

தனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாகவும் பிரதமர் மோடி இந்த பிரச்சினையை கவனிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

Update: 2019-11-04 06:48 GMT
கொல்கத்தா,

தூதரக அதிகாரிகள், அரசியல் எதிர்ப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட உலகமெங்கும் 1,400 ‘வாட்ஸ்-அப்’ உபயோகிப்பாளர்கள், இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருள் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டுள்ளனர்” அதில் இந்தியர்களும் அடங்குவர் என்று வாஸ்-அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் செல்போன்  ஒட்டுக்கேட்கப்பட்டதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க  முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தனது செல்போன் தகவல்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது தொலைபேசியோ, செல்போனோ அல்லது வாட்ஸ்-அப்போ தனிநபர் தகவல் பறிமாற்றத்திற்கு பாதுகாப்பானதாக இல்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்  கூறியதாவது;-

"இஸ்ரேல் என்எஸ்ஓ இந்த மென்பொருளை மத்திய அரசிற்கு வழங்கியுள்ளது என்பது உண்மை. எனது தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டது, என்னிடம் ஆதாரங்கள் இருப்பதால் அதைப் பற்றி எனக்குத் தெரியும்.

அரசியல்வாதிகள், ஊடக நபர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிற முக்கிய நபர்களின் செயல்பாடுகள்  இஸ்ரேல்  மென்பொருள் மூலம் ஒட்டு  கேட்கப்படுகிறது. வாட்ஸ்-அப் பாதுகாப்பானது அல்ல,  உங்கள் செய்திகள் இனி பாதுகாப்பாக இல்லை. லேண்ட்லைன், மொபைல் போன்கள் மற்றும் வாட்ஸ்-அப் செய்திகள் எதுவும் பாதுகாப்பாக இல்லை.

மத்திய அரசு அதன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களைக் கொடுக்க வேண்டும், சில சமயங்களில் இந்த வேலை அலுவலக நேரத்திற்குப் பிறகு செய்யப்படுகிறது, ஆனால் இப்போது எங்கள் பேச்சுகள் பதிவு  செய்யப்படும்போது, நமது அரசாங்கம் எவ்வாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க முடியும். இந்த பிரச்சினையை கவனத்தில் கொள்ளுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

மேலும் செய்திகள்