போக்குவரத்து விதிமீறல்: பா.ஜனதா முன்னாள் மந்திரிக்கு ரூ.4000 அபராதம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பா.ஜனதாவின் முன்னாள் மந்திரி விஜய் கோயலுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2019-11-04 17:58 GMT
புதுடெல்லி,
 
டெல்லியில் அதிகளவு காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வரும் 15ம் தேதி வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவம்பர் 4, 6, 8, 12, 14 ஆகிய தேதிகளில், இரட்டைப்படையில் முடியும் வாகனங்களையும், நவம்பர் 5, 7, 9, 11, 15 ஆகிய தேதிகளில் ஒற்றைப்படையில் முடியும் வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும். இந்த வாகன கட்டுப்பாடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விதிமுறையை மீறி, பா.ஜனதாவின் முன்னாள் மந்திரியான விஜய் கோயல், இன்று ஒற்றைப்படை எண்ணில் முடிவடையும் பதிவு எண் உடைய காரில் வந்ததால் அவருக்கு, ரூ.4,000 அபராதமாக விதிக்கப்பட்டது.

இது குறித்து விஜய் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், ஆம் ஆத்மி அரசு, மக்களை ஏமாற்றுவதற்காக நாடகமாடுகிறது. விவசாயிகள் எரிக்கும் விவசாய கழிவே காற்று மாசுக்கு முக்கிய காரணம். வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதால் காற்று மாசு குறையப் போவது இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
 

மேலும் செய்திகள்